Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
அக்டோபர் 2008
தீப்பொறி
நிலா

வசந்தம் மகளிர் விடுதி.

தனது அறையினுள் நுழைந்தவள், நேரே சென்று பெட்டியைத் திறந்து, கைப்பையிலிருந்த பணத்தை எடுத்து அதனுள் பத்திரப்படுத்தி வைத்தாள். முதல் மாத சம்பளம் ஆயிற்றே! அவள் மனம் முழுவதும் மகிழ்ச்சியில் நிரம்பி இருந்தது. நாளை மறுநாள் ஏதேனும் ஒரு வங்கியில் இந்தப் பணத்தைக் கொண்டு சேமிப்புக் கணக்கொன்றைத் துவங்கிவிட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள். கட்டிலில் அமர்ந்துகொண்டு அந்த அறையை இப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல நோட்டமிட்டுக் கொண்டிருந்தவள், ஓரு நிமிடம் கழித்து எழுந்து சென்று முகம் கழுவித் துணி மாற்றிப் பின்னர் மீண்டும் வந்தமர்ந்தாள்.

இன்றோடு இவ்விடுதியில் சேர்ந்து ஒரு மாதம் ஆனதும் நினைவுக்கு வந்தது. இந்த அறையில் மட்டுமே இவளோடு சேர்த்து நான்கு பெண்கள் தங்கி இருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் அறைத்தோழி சிவகாமி வந்து சேர்ந்தாள்.

“என்ன மேகலா... அதுக்குள்ளே வந்துட்டே... உன்னோட நேரமே எட்டுமணி தானே. ஆறரைக்கெல்லாம் அறையிலே உன்னைப் பார்க்கறது அதிசயமாச்சே...'' வியப்புடன் சொல்லி முடித்தாள்.

“ஆமா... சிவா... இன்னக்கி நூலகத்துக்குக்கூடப் போகலே. மனசு கொஞ்சம் பரபரன்னு இருந்தது. நேரா நம்ம அறைக்கே வந்துட்டேன்...''

“ஏன்... என்னாச்சு...''

“என்ன மறந்துட்டியா... இன்னக்கி என்னோட முதல் மாச சம்பளநாள் இல்லே...''

“ஓ... ஆமாமா... காலையிலேயே நீ சொன்னே இல்லே.. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேறெ... உன்னோட ‘டிரீட்'லே எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். இத்தனை நல்ல விஷயத்தை நான் மறந்துட்டேன். பாரேன்...'' சிவகாமி சிரித்தபடி சொன்னாள்.

சிவகாமி சட்டப்படிப்பை சென்ற ஆண்டுதான் முடித்திருந்தாள். மூத்த வழக்குரைஞர் ஒருவரிடம் பயிற்சியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள். ஆறுமாதங்களுக்கும் மேலாக இந்த மகளிர் விடுதியில்தான் தங்கி இருக்கிறாள். ஒரு மாதத்திற்கு முன்பாக வந்து சேர்ந்த மேகலாவிற்கு மிகவும் நெருக்கமான தோழியாகவும் ஆகி இருந்தாள்.

மேகலா தனது முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தநிலையில் தெந்தவர் மூலமாக ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். பெற்றோரும், தங்கையும் வெளியூரில் இருக்க பணி நிமித்தமாக இவளும் விடுதிவாசியாக மாறி இருந்தாள். வசந்தம் மகளிர் விடுதியில் ஏறக்குறைய ஐம்பது பெண்கள் தங்கி இருந்தனர். அவர்களில் திருமணமான பெண்கள் சிலரும், கல்லூரி மாணவியர் சிலரும் கூட இருந்தனர். நகல் இருந்த ஏராளமான தங்கும் விடுதிகளில் நடுத்தர வர்க்க குடும்ப நிலைமைக்கு, இந்த விடுதிதான் பொருளாதார ரீதியில் ஓரளவு ஒத்து வருவதாக இங்குள்ள பெண்கள் பேசிக் கொண்டனர்.

இரவு உணவு நேரம். விடுதியில் சலசலப்பும், பேச்சுக்குரல்களும் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன. அங்கங்கே தனியாகவும், இருவராகவும், ஒரு குழுவாகவும் அமர்ந்து பெண்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மேகலாவைச் சுற்றிலும் ஏழெட்டு பெண்கள் அமர்ந்திருந்தனர்.

“மேகலா... நாளைக்கு எங்களுக்கு என்ன ஸ்பெஷலா வாங்கித் தரப்போறே...'' அனுராதா கேட்டாள்.

“என்ன வேணும்னு சொல்லு அனு... அதை நான் வாங்கித் தர்றேன்...'' சொல்லிவிட்டு இளநகை புந்தாள் மேகலா.

“அதெல்லாம் இருக்கட்டும். சம்பளப் பணத்தை வீட்டுக்கு அனுப்பணுமில்லே... பார்த்துச் செலவு செய் மேகலா...'' என்றாள் பூங்குழலி பொறுப்புணர்வோடு.

“குழலி... நீ வேறெ... அவ வீட்டுக்கு பணமே அனுப்பப் போறதில்லே தெயுமா...'' சிவகாமி சொல்ல பெண்களனைவரும் மேகலாவை ஆச்சயத்தோடு பார்த்தனர்.

“ஏன்... உண்மையாவா மேகலா...?'' குழலியின் குரலில் வியப்பு.

“ஆமா... ஏதாவதொரு வங்கியிலே சேமிப்புக் கணக்கைத் துவங்கி அதிலே போட்டு வைக்கலாம்னுதான் இருக்கேன்...''

“வீட்டுலே ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா...'' செல்வி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.

“இல்லே செல்வி... எங்கம்மாவே தான் சம்பளப் பணத்தை அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டாங்க...''

குழுமியிருந்த பெண்களுக்கு மேலும் ஆச்சயம் கூடியது. ஏற்கனவே தனது அன்னையைப் பற்றி மேகலா கூறி இருந்த செய்திகளே அவர்களால் நம்ப இயலாததாகத் தான் இருந்தது. கோவிலுக்குப் போகாத, தாலி அணியாத, திரைப்படங்களைப் பார்க்காத ஒரு பெண்மணியை அவர்களால் கற்பனை செய்வது என்பது எப்போதுமே இயலாத ஒன்றாகவே இருந்தது. இப்போது இந்தச் செய்தியும் சேர்ந்து அவர்களது வியப்பு கூடியது.

“அதுவும் சரிதான்... இனிமே கல்யாணச் செலவு, வரதட்சணை, அது இதுன்னு ஏராளமாப் பணம் தேவைப்படுமே... அதற்கான சேமிப்பா இது இருக்கட்டும்'' கவிதா எதார்த்தமாகச் சொன்னாள்.

“சேச்சே... என்ன கவிதா... மேகலாவைப் பார்த்து இப்படிச் சொல்லிட்டே... அவளாவது வரதட்சணை கொடுத்துக் கல்யாணம் பண்றதாவது...'' சிவகாமி குறுக்கிட்டுச் சொன்னாள்.

“வரதட்சணை கொடுக்காம கல்யாணம் நடக்குமா என்ன...'' செல்வியின் கேள்வி இது.

மேகலா சிறுபுன்னகையோடு பதில் சொன்னாள். “காதல் திருமணங்களிலே வரதட்சணை கிடையாதுன்னு நாம கேள்விப்பட்டிருக்கோமே செல்வி... மறந்துட்டியா...''

“அப்போ... உன்னோட கல்யாணம் காதல் திருமணம்தானா... மேகலா''

அனுவின் கேள்விக்கு மேகலா தலையாட்டினாள். “ஆமா... அப்படித்தான் இருக்கணும்னு ஆசைப்படறேன். என்றவள் தொடர்ந்து, “இல்லே... தீர்மானமா முடிவே பண்ணி வெச்சிட்டேன்'' என்றாள் உறுதியான தொனியில்.

“அம்மாடி... என்ன துணிச்சலாய்ப் பேசறாப் பாரேன். வீட்டுலே ஒத்துக்குவாங்களா...''

“அவங்கம்மாவெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க குழலி... இவ அம்மா அப்பாவே காதலிச்சுத் திருமணம் பண்ணிகிட்டவங்க தான்'' சிவகாமி புதிதாக மேலும் ஒரு தகவலைத் தந்தாள்.

“என்னைப் பொறுத்தவரைக்கும் அம்மா அப்பா பார்த்து செய்து வைக்கிற கல்யாணம்தான் ரொம்பப் பாதுகாப்பானதா இருக்கும். கட்டிக்கிற ஆம்பளைக்கும் அப்பத்தான் ஒரு பயம் இருக்கும்'' செல்வி தனது கருத்தைச் சொன்னாள்.

“என்ன பயம்...'' மேகலா புயாதவளாய்க் கேட்டாள்.

“பெண்டாட்டி, பிள்ளைகளை ஒழுங்கா வச்சுக் காப்பாத்தணுங்கிற பயம். இல்லாம போனா பெரியவங்க தட்டிக் கேப்பாங்க... திட்டுவாங்க... என்கிற
பயமெல்லாம் அப்பத்தானே ஆம்பிளைக்கு இருக்கும்?''

“அப்படீன்னா... கல்யாணம் முடிஞ்சதுக்கப் புறமும் உன்னோட வாழ்க்கை உன் கையிலே இல்லேன்னு சொல்லு. கணவன் வெச்சுக் காப்பாத்தணும். அது இல்லாமல் போனா பெத்தவங்க வந்து அவனைத் தட்டிக் கேக்கணும். அப்படித் தானே...'' மேகலாவின் கேள்வி இது.

இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் திகைத்த செல்விக்கு ஆதரவாக அனு சொன்னாள். “என்ன மேகலா... இப்படிக் கேக்கறே... இதுதானே காலம் காலமாக நடந்துகிட்டிருக்கு... அதுதானே பெண்களுக்கான வாழ்க்கை யாவும் இருக்கு...''

கையிலிருந்து தண்ணீர் பாட்டிலில் ஒரு மிடறு குடித்துவிட்டு அதனைக் கீழே வைத்த மேகலா சொன்னாள். “ஆமா அனு... உண்மைதான் ஒத்துக்கறேன். நம்ம கொள்ளுப்பாட்டி, எள்ளுப் பாட்டி, முப்பாட்டி காலத்துலே இருந்து இதுதான் நடந்துகிட்டு இருக்குது. அவங்களுக்கெல்லாம் கல்வியறிவு கெடைக்கலே... இந்தச் சமூகம் கொடுக்கலே... நம்ம அம்மா காலத்துலே ஏதோ கொஞ்சம் அவங்களுக்கு கல்வி கெடச்சுது. ஆனா... இப்ப நமக்கு... கல்வி கெடச்சுது. வேலை கெடைக்குது.. அந்த வேலைக்காக நூத்துக்கணக்கான மைல் தொலைவிலே பெத்தவங்களை விட்டு தன்னந்தனியா விடுதியிலே தங்கி உழைச்சு சம்பாதிக்கிறோம். இதெல்லாம் நம்ம காலத்திலேதானே நடக்குது?''

“ஆமா... அதுக்கு நாமென்ன பண்ண முடியும் மேகலா...''

“என்ன சிவா, இப்படிக் கேக்கறே... எல்லாமே மாறின மாதிரி நாமெல்லாம் அந்தப் பழைய வாழ்முறையிலிருந்து மாறத்தானே வேணும்? அதுதானே சரியாகவும் இருக்கும்...''

“நீ என்ன சொல்றேன்னு எனக்குப் புரியலே மேகலா...'' அனு இழுத்தாள்.

“காலம் மாறிப் போச்சுன்னு சொல்றேன் அனு. அதனாலே இந்தக்காலப் பெண்கள் மாற ஆரம்பிச்சிட்டாங்க... நாமும் மாற ஆரம்பிக்கணும்னு சொல்றேன்'' மேகலாவின் குரலில் அழுத்தம் தெரிந்தது.

“அப்போ... எல்லாப் பெண்களுமே காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றியா மேகலா...'' அதிர்ந்துபோன குரலில் சிவகாமி கேட்டாள்.

“ஆமா... அதிலென்ன தப்பு... ரெண்டு தலைமுறைக்கு முன்னாலே ஆண்கள் மட்டும் சம்பாதிச்சுகிட்டு இருந்தாங்க. அதனாலே அவங்க மட்டும் காதலிக்கலாம்னு எழுதப்படாத சட்டம் இருந்தது. இப்ப ஓரளவுக்கு பெண்களும் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சொந்தக் கால்லே நிக்கிறாங்க... அவங்களும்தான் காதலிக்க ஆரம்பிக்கட்டுமே... அப்பத்தானே வரதட்சணையோடு சேர்ந்து சாதிபேதம் ஒழியறதுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்...'' மேகலா ஒரு பிரசங்கத்தையே நிகழ்த்தினாள்.

“இப்படியெல்லாம் பேசறதுக்கு எங்க கத்துகிட்டே மேகலா...'' குழலி மெல்லக் கேட்டாள்.

“அவதான் தினமும் லைப்ரரிக்குப் போறாளே... அங்கிருக்கிற புத்தகங்க கத்துக் கொடுத்த பாடமாத்தான் இருக்கும்.. அப்படித்தானே...'' அனு கேட்க மேகலா பதில் கூறாது சித்தாள்.

“கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா... இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. கல்யாணத்துக்கப்புறம் காதலிச்சவன் சயில்லேன்னு தெரிய வந்தா... அப்போ நம்ம கதி...'' சிவகாமி மீண்டும் ஆரம்பித்தாள்.

“எந்த நிலையிலும்... எப்போதுமே... நமக்கான ஒரு வாழ்க்கை இந்த உலகத்துலே இருந்துட்டுத்தான் இருக்கும். அது எங்கேன்னு தீவிரமாத் தேடிக் கண்டுபிடிச்சு வாழ்ந்துட வேண்டியதுதான்...'' உறுதியுடன் சொன்னாள் மேகலா.

“நீ ரொம்பத் துணிச்சல்காரி... அதனாலேதான் உன்னாலே இத்தனை கறாராப் பேச முடியுது. எங்க வீட்டுலே காதல்.. கீதல்னு பேசினாலே அடி உதை தான் விழும் தெரியுமா...'' உண்மையைச் சொன்னாள் சிவகாமி.

“ஆமா.. எங்க வீட்டுலேயும்தான்'' ஒருமித்த கருத்தில் பல குரல்கள் ஒன்றாக ஒலித்தன.

“உங்கம்மா டீச்சரா இருக்கறதாலேதான் இத்தனை சுதந்திரம் கொடுத்து உன்னை வளர்த்து இருக்காங்கன்னு எனக்குத் தோணுது'' ராதா மனதில் பட்டதைச் சொல்ல சிவகாமி அதனை மறுத்தாள். “டீச்சரா வேலை பாக்குற எல்லாருமேவா இப்படி வளர்ப்பாங்க... அதெல்லாம் கிடையாது...''

“ஆமா... சிவகாமி சொல்றது சரிதான். டீச்சரா இருக்கறதாலேதான் எங்கம்மா எனக்கு இத்தனை சுதந்திரம் கொடுத்திருக்காங்கன்னு சொல்ல முடியாது. தன்னோட வளர்ப்பு முறையிலும், என்னோட வளர்ச்சியிலும் அவங்களுக்கு நிறையத் தெளிவு இருந்திருக்கணும். ஒரு திட்டமிட்ட முறையும் கூடத் தெஞ்சிருக்கணும். அதனாலேதான் என்னாலேயும் இத்தனை துணிச்சலாப் பேசமுடியுதுன்னு நினைக்கிறேன்...''

“என்னதான் சொல்லு மேகலா... கல்யாணம்ங்கிறது ரொம்பப் பெரிய விஷயம்தானே... அதை நாமே முடிவு பண்றதுங்கறது சரியா...'' நியாயமான கேள்வியினைத் தொடுத்தாள் செல்வி.

“ஆமா... கண்டிப்பா... திருமணம் வாழ்க்கையிலே மிக முக்கியமான நிகழ்ச்சிதான். அதைத் தன்னந்தனியா நாமே தீர்மானிக்க முடியாதுங்கிறதும் உண்மைதான். ஆனா... நாமே அதை முடிவுசெய்யப் போறதில்லையே... பெத்தவங்க ஆலோசனையோட அதைத் தீர்மானம் செய்யறதுதான் சரியானதாகவும் இருக்கும். இந்த சம்பளப் பணத்தைக்கூட நான் ஒழுங்கான முறையிலே கையாளணும் - கையாளக் கத்துக்கணும்னு நினைச்சுத் தான் பணத்தை அனுப்ப வேண்டாம்னு எங்கம்மா சொல்லி இருப்பாங்க...'' மேகலா உறுதியான தொனியில் சொன்னாள்.

அங்கு சிறிதுநேரம் அமைதி நிலவியது. இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று அப்பெண்களுக்கு புயவில்லை. குழலிதான் அமைதியைக் கலைத்தாள். “நீ சொல்றதை நம்பவும் முடியலே... நம்பாமே இருக்கவும் முடியலே... ஏன்னா... நீ சொல்றது எல்லாமே புதுசா இருக்கு...''

“எனக்கும்தான் மேகலா... புரிஞ்ச மாதியும் இருக்கு... புரியாத மாதியும் தெரியுது'' குழம்பிய நிலையில் அனு மெல்லிய குரலில் சொன்னாள்.
“சரி போகட்டும் விடுங்க... நாம ரொம்ப நேரம் பேசிட்டோம் போல இருக்கு. இன்னொரு நாள் இதைப் பத்திப் பேசலாம். நாளைக்கு மதியம் நாமெல்லாம் வெளியே போய்ச் சாப்பிடப் போறோம். என்ன சரிதானே...'' என்றபடி மேகலா எழுந்து நடக்க மற்ற பெண்களும் அவளைப் பின்தொடர்ந்தனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com